சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.பி இல்ல திருமண விழாவில் அதிமுக எம்.பி பங்கேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்

சென்னை: சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்த திமுக எம்.பி இல்ல திருமண விழாவில் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.- நளினி ஆகியோரின் மகள் தரணி -ச.இராகவேந்திர மூர்த்தி ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி,  மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று மணவிழாவினை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.   மணமக்களை வாழ்த்தி பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி,  க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். திருமண விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

எனது பணிவான வணக்கங்கள். என்னுடைய மேடை பேச்சு சரியாக இருக்காது. அதுவும் திமுக பேச்சாளர்கள் முன்னிலையில் நான் ஒரு பெரிய ஜீரோவாக இருக்க விரும்பவில்லை. முதல்வருக்கு நன்றி. மாநிலங்களவைக்கு நான் சென்ற போது, பல விஷயங்களை கற்று கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். இப்போதும், கற்றுக்கொள்கிறேன். அதில் எதுவும் சந்தேகம் இல்லை. அந்த வகையில் கனிமொழி, டிகே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பல விஷயங்களை எனக்கு கற்று கொடுத்து இருக்கிறார்கள். ஒரு முறை மத்திய அமைச்சரிடம் எனது அனுபவவின்மையால் சண்டை போட வேண்டிய நிகழ்வு ஏற்பட்டது. இண்டர்னல் மீட்டிங்கில்.

அப்போது கனிமொழி கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் பேசுகிறேன். அது தமிழ்நாட்டை பொறுத்த விஷயம். உடனே  கனிமொழி அவரிடம் பேசி இது எங்கள் தமிழ்நாட்டை பாதிக்கின்ற விஷயமாக இருக்கிறது. நவநீதம் சொல்வதை கேட்டு விட்டு இந்த பில்லை பாஸ் பண்ணலாம் என்றார். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று எனக்கும் அறிவுரை கொடுத்து, நம்ம ஊர் மாதிரி பேசக்கூடாது என்றார். டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றவர் போன்று என்னை சோதிக்க மாட்டார். எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பவர். மற்றவர்கள் யார் என்று சொல்ல மாட்டேன். கனிமொழி தமிழ் மக்கள் மீது பற்று கொண்டவர். நான் தேவையில்லாமல் சர்ச்ைசயில் மாட்டி கொள்ளக்கூடாது என்ற நல்ல உணர்வு அவரிடம் இருந்தது. பாராளுமன்றத்தில் எப்படி நிகழ்வு நடைபெறுகின்றன என்று புரிய வைத்த ஒரு நிகழ்வாக அந்த கூட்டம் அமைந்தது. இவ்வாறு பேசினார்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுவரை அதிமுகவை சார்ந்தவர்கள் யாரும் பங்கேற்றது இல்லை. இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்த திருமண விழாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவநீதகிருஷ்ணன், டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நெருங்கிய நண்பர். அவர் அண்மையில் திமுகவில் இணைய போகிறார் என்ற தகவல் வெகுவாக பரவியது. இந்த நிலையில் அவர் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல திருமண விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Related Stories: