திருப்பூர் பாப்பாங்குளம் பகுதியில் தப்பிய சிறுத்தை; அம்மாபாளையம் பகுதியில் பதுங்கி மேலும் ஒருவர் மீது தாக்குதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பாப்பாங்குளம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அன்று வரதராஜன் என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தையானது, வரதராஜன் மற்றும் அவரது தோட்டத்தில் பணிபுரிந்த மாறன் ஆகிய இருவரையும் தாக்கியது. தாக்குதலுக்கு உள்ளனோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளனோரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, சிறுத்தை தங்களை தாக்கியதாக தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் பாப்பாங்குளம் பகுதியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா? என கண்காணித்து, பின்னர் சிறுத்தை இருப்பதை உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு பணியின் போது வனத்துறை ஊழியர் ஒருவரை சிறுத்தை தாக்கியது. எனவே, சிறுத்தை பிடிக்க சுற்றியிருக்கும் பகுதியில் 3 கூண்டுகளை அமைத்து, 20- க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வலை துப்பாக்கி, மயக்க ஊசி உள்ளிட்டவற்றின் மூலம் சிறுத்தையை பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். அதனைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அன்று, வனத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மயக்கஊசி செலுத்திய துப்பாக்கியின் மூலம் சிறுத்தையை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இருப்பினும், வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பை மீறி சிறுத்தையானது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றது. சிறுத்தை தப்பிய அன்று மாலை, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் அருகே கொங்குபாளையம் பகுதியில் சிறுத்தையானது சாலையை கடந்து சென்றதாக அவ்வழியே சென்ற ஒருவர், பெருமாநல்லூர் ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அத்தகவலை அடுத்து, கொங்குபாளையம் பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பகுதியில் 20- க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டும், 8- க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்தும் சிறுத்தையை மிக தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில் திருப்பூரின் ஊரக பகுதியில் சுற்றி வந்த சிறுத்தையானது, இன்று திருப்பூர் அம்மாபாளையம் மாநகர் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பனிக்குள் புகுந்ததாகவும், அங்கிருந்த ராஜேந்திரன் என்பவரை தாக்கியதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுத்தை தாக்கியதை உறுதி செய்ததையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தற்பொழுது வனத்துறையினர் அம்மாபாளையம் பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்கு பணியில் ஈடுபட்ட வேட்டை தடுப்புக்காவலர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அம்மாபாளையம் பகுதியில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.                      

Related Stories: