நீர்நிலை தொடர்பான இடங்களை பத்திரப்பதிவு செய்ய தடை!: ஆக்கிரமிப்புகளை தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் செக்..!!

சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்க, நீர்நிலை தொடர்பான இடங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அருகே சிட்டலபாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே சுடுகாவூர் நீர் நிலை, பண்ருட்டியில் உள்ள சிட்டிபட்டறை மற்றும் மேட்டூர் ஏரிகள், விழுப்புரம் வடவம்பாளையம் பாசன கால்வாய், மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி, கீழ் மருவத்தூர் ஏரி, கடலூரில் உள்ள வீமாத்தூர் ஏரி உள்ளிட்ட பல நீர்நிலைகளை பாதுகாக்கக்கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசலு அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுவில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று விரிவான விசாரணை நடைபெற்றது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் தண்ணீர் மிகவும் அவசியமானது. தற்போது மழையால் நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 4 மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிவித்தார்கள். வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்கள் சிலவும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டு மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளதாகவும், நீர்நலைகளை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவு துறைக்கு ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளதாகவும், அதேபோல் நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவித மின் இணைப்பும் தரக்கூடாது. வரிவசூல் செய்யக்கூடாது. குடிநீர் இணைப்பு தரக்கூடாது. திட்ட அனுமதி தரக்கூடாது என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இனி தமிழகத்தில் எந்தவொரு நீர்நிலைகளையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், ஆக்கிரமிப்புகளை தடுக்க, நீர்நிலை தொடர்பான இடங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவு துறையினருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அனுமதி கோரும் கட்டடம் நீர்நிலைகளில் இல்லை என ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆக்கிரமிப்பு இல்லை என்ற ஆணை கிடைக்காமல் மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்க கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு ஒப்புதல், அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

Related Stories: