மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் இணையதளம் மூலம் கண்காணிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமிரா, நுண் பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்படவுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார். இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து இயக்ககம் ஆகியவற்றுடன் ஆலோசித்து உள்ளாட்சித் தேர்தலின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை 10.12.2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட நேற்றுமுன்தினம் கூடுதல் அறிவுரைகளையும் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 13 பொருட்களை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கிட தக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. வெப்பமானி (தெர்மோ மீட்டர்) கை சுத்திகரிப்பான் (சானிடைசர்), முகக்கவசம், முகமூடி, கை உறைகள் பிபிஇ கிட்ஸ், டி-கட் பேக்ஸ், வாக்காளர்களுக்கான கையுறைகள், பிரவுன் டேப், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் போன்றவை மாவட்ட அளவில் கொள்முதல் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமிரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மற்றும் இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகள் இணையதள கண்காணிப்பு (வெப் ஸ்ட்ரீமிங்) மூலம் மூலம் கண்காணிக்கவும் அவ்வாறு இணையதள கண்காணிப்பு அமைக்கப்பட இயலாத வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமரா உடன் மத்திய அரசு. நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்களை நுண் பார்வையாளர்களாக  நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதர அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி மூலம் கண்காணித்திட உரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் (உட்புறம் மற்றும் வெளிப்புறம்) மற்றும் வாக்கு எண்ணும் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க உரிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

* வேட்புமனுவுடன் குற்றவியல் விவரங்கள் இணைப்பு

வேட்பாளர்களின் கல்வித் தகுதி சொத்து விவரம் மற்றும் குற்றவியல் குறித்த விவரங்களை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உறுதிமொழி ஆவணம் வேட்பாளர்களால் படிவம் 3 ஏ ரூ.20க்கான முத்திரைத்தாளில் வேட்பு மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.

* வேட்பு மனு திரும்ப பெறும் நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி படிவம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பாகவும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பாகவும் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்தும்போது அந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் என்பதற்கு, ஆதாரமாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு திரும்பப் பெறும் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னதாகச் சேர்க்க வேண்டும். காலம் கடந்து படிவங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக மட்டுமே கருதப்படுவார். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: