புதுக்கோட்டையில் பரபரப்பு தவறான சிகிச்சையால் ஜிஹெச்சில் வாலிபர் சாவு? உடலுடன் உறவினர்கள் போராட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று அந்த வாலிபர் உயிரிழந்ததால் தவறான சிகிச்சையால்தான் அவர் இறந்தார் என குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் வாலிபரின் சடலத்தோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், வைத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(27). இவருக்கு அழகம்பிகா என்ற மனைவியும், மூன்றரை வயதில் சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர். முருகேசன் ஒவ்வொரு கிராமமாக  சென்று தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்திற்கு  சென்றுவிட்டு டூவீலரில் ஊர் திரும்பும்போது சோலகம்பட்டி என்ற இடத்தில் சாலையில் நாய் குறுக்கே வந்த காரணத்தால் விபத்தில் சிக்கினார். இதனையடுத்து  முருகேசன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முருகேசனுக்கு வயிற்றில் காயமடைந்து குடல் வாழ்வில் பிரச்னை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று  மருத்துவர்கள் கூறினர். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் முருகேசனுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு முருகேசன் நலமாக இறந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

மேலும் நேற்று காலை வரை உறவினர்களிடம் அவர் பேசி வந்த நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு சென்றுள்ளனர். பிறகு செவிலியர் ஒருவர் முருகேசனுக்கு ஊசி ஒன்றை போட்டுள்ளார். இதனையடுத்து  ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே முருகேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசனின் உறவினர்கள் செவிலியர் தவறான ஊசி போட்டதால் தான் முருகேசன் உயிரிழந்துவிட்டதாக கூறி அவரது சடலத்தை மருத்துவ  கல்லூரி மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு முன்பு வைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகர டிஎஸ்பி., லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: