கண்ட இடங்களில் கொட்டப்படும் கழிவு; மறையூரில் சுகாதாரம் அரைகுறை: பொதுமக்கள் அவதி

மூணாறு: மறையூர் பஞ்சாயத்தில் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டிச் செல்வதால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. மூணாறை அடுத்த மறையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்ட இடம் இல்லாததால், பொது இடங்கள் மற்றும் ஓடைகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது. பஞ்சாயத்து தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க ஹரித கர்மசேனா செயல்பட்டு வருகிறது. ஆனால் இதர கழிவுகளை சேகரிக்க நடவடிக்கை இல்லை.

பல வணிக நிறுவனங்களில் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. இருட்டின் மறைவில் வாகனங்களில் வந்து கழிவுகளை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொட்டிச்செல்கின்றனர். இறைச்சி கழிவுகளை கொட்டிச்செல்வதால் தெருநாய்கள் இவற்றை எடுத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. கொட்டப்படும் இறைச்சி கழிவுகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

மேலும் வனப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கொரோன தொற்று அதிகரித்து வரும் இந்த சமயத்தில் இது போன்று கழிவுகளை கொட்டி செல்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: