தஞ்சை பிளஸ்2 மாணவியின் வாக்குமூலத்தை செல்போனில் வீடியோ எடுத்தவர் போலீசில் ஆஜர்

தஞ்சாவூர்: தற்கொலை செய்து கொண்ட தஞ்சை பிளஸ்2 மாணவி வாக்குமூலத்தை வீடியோ எடுத்தவர் காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்2 மாணவி பூச்சி மருந்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 19ம்தேதி இறந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறும்படி வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி, சிபிசிஐடி விசாரணைக்கு வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் பெற்றோர் ஆஜராகி வாக்குமூலத்தை தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது. அதன்படி தஞ்சாவூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் கடந்த 23ம் தேதி வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வாக்குமூலம் அறிக்கை உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மாணவி பேசியதாக கூறப்படும் அந்த வீடியோ பதிவை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்ட உறுப்பினர் முத்துவேல், வல்லம் டிஎஸ்பி பிருந்தா முன்னிலையில்  நேற்று பிற்பகல் ஆஜாராகி வீடியோ பதிவு செய்த செல்போனை ஒப்படைத்தார். அப்போது மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதுபற்றி முத்துவேல் கூறுகையில், குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் மாணவியை பார்ப்பதற்காக கடந்த 17ம் தேதி சென்றிருந்தேன். மாணவியின் பெற்றோர் கூறியதன்பேரில் மாணவி பேசியதை செல்போனில் பதிவு செய்தேன். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி செல்போனை டிஎஸ்பியிடம் ஒப்படைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Related Stories: