2வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரம்: கிராம மக்கள் அச்சத்தில் தவிப்பு

அவிநாசி: அவிநாசி அருகே 5 பேரை தாக்கிய சிறுத்தையை, கூண்டுகள் வைத்து பிடிக்கும் பணியில் இரண்டாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள பாப்பாங்குளம் பகுதியில் ஊரடித் தோட்டத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (63). இவர் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்ட சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணியில் நேற்று காலை கூலி தொழிலாளி மாறன் (66) உடன் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிறுத்தை தாக்கியதில் வரதராஜன், மாறன் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேயூர் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் மோகன் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோளக்காட்டில் மறைந்திருந்த சிறுத்தை வேகமாக பாய்ந்து 2 பேரையும் தாக்கியது. அங்கு கிராம மக்கள் திரண்டு வந்து சத்தமிட்டதால், அங்கிருந்து சிறுத்தை தப்பியோடியது.

இத்தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, கூடுதல் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணசாமி, கணேஷ்ராம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கயம் பூபதி, அவிநாசி காவல் கண்காணிப்பாளர் பவுல்ராஜ், சேவூர் போலீசார், வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட தானியங்கி சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டது.

மேலும் 2 ட்ரோன் கேமராக்கள் மூலம் சிறுத்தை மறைந்திருக்கும் இடத்தை தேடி வருகின்றனர். நேற்று மாலை தோட்டத்து பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமராவதி பகுதியை சேர்ந்த வனச்சரக வேட்டைத் தடுப்புக் காவலர் மணிகண்டனை (40) பதுக்கியிருந்த சிறுத்தை தாக்கியது. இதையடுத்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று இரவு 8 மணி அளவில் தோட்டத்துப் பகுதியை விட்டு சிறுத்தை வெளியே வர முயன்றுள்ளது. ஆனால், மீண்டும் சோளக்காட்டுக்குள்ளேயே சென்று பதுங்கி கொண்டது.

கிராம மக்கள் யாரும் தனியாக வெளியே செல்லக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தோட்டத்து பகுதியில் வலை விரித்தும், 2 கூண்டுகள் வைத்தும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் 2வது நாளாக ஈடுபட்டுள்ளனர். இதனால், பாப்பாங்குளம் ஊராட்சியில் உள்ள கிராமமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

Related Stories: