அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதே தற்போதைய உடனடி தேவை!: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதே தற்போதைய உடனடி தேவை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். அரசு, தனியார் பள்ளிகளுக்கு இடையேயான எதிர்மறை வேறுபாடுகள் கவலையை ஏற்படுத்துகின்றன என்றும் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். குடியரசுத் தினத்தை ஒட்டி கவர்னர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அரசுப்பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய உடனடி தேவை எனவும், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் உள்ள எதிர்மறை வேறுபாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தனியார் பள்ளிகளில் ஏழைகளால் சேர முடியாது, அரசுப் பள்ளிகள் மட்டுமே அவர்களுக்கான நம்பிக்கை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்தனர்.

7.5 சதவீதம்  உள் ஒதுக்கீடு காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் வாய்ப்பு அதிகரித்துள்ளது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். உயர் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இருந்த பெயரையும் பெருமையையும் மீண்டும் பெற உழைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் பெருமையை நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் அறிய செய்கிற அதே நேரத்தில், பிற இந்தியா மொழிகளையும் நாம் பயில வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் தொடர்பான சட்ட மசோதா நிலுவையில் இருக்கின்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ள நிலையில், நீட் தேர்வு குறித்த கவர்னரின் இத்தகைய செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: