சென்னையில் உச்சம் தொட்டு குறையும் கொரோனா தொற்று: தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரக் கோரிக்கை

சென்னை: சென்னையிலும் மேலும் சில மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உட்சம் தொட்டு குறைய தொடங்கியிருக்கிறது. ஆனால் கோவை மாவட்டத்திலோ தொற்றுப் பரவல் ஏறுமுகத்திலேயே இருக்கிறது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தினசரி கொரோனா தொற்று கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் குறைந்து வருகிறது. சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இறங்குமுகத்தில் இருக்கிறது. ஆனால் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.

சென்னையில் ஜனவரி 16 ஆம் தேதியன்று அதிகபட்சமாக 8,987 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. தற்போதைய அலையில் அதுவே அதிகபட்சமாக கருதப்படுகிறது. அதன் பிறகு சரிந்து வந்த தினசரி தொற்று ஜனவரி 24 ஆம் தேதியன்று 6,296 ஆக பதிவானது. திருவள்ளூரில் ஜனவரி 15 ஆம் தேதி 1,478 பேருக்கு உறுதியானது. அதன் பிறகு சரிவு கண்டு ஜனவரி 24- ல்  746 ஆக பதிவானது. செங்கல்பட்டில் ஜனவரி 15 ஆம் தேதி 2,854 ஆக தினசரி தொற்று பதிவான நிலையில் ஜனவரி 24- ல் 1,742 ஆக குறைந்துள்ளது.

ஆனால் இவற்றிக்கு முரணாக கோவையில் ஜனவரி 11ம் தேதியன்று 863 ஆக இருந்த தினசரி தொற்று, ஜனவரி 24- ல் 3,786 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஜனவரி 23- ஐ ஒப்பிடும்போது சற்று குறைவாக இருந்தாலும் பெரிய அளவில் மாற்றமில்லை. சென்னையில் தொற்று உறுதியாகும் சதவிகிதமும் குறைந்து வருகிறது. தொற்றுப் பரவல் விகிதம் 30% ஆக இருந்த நிலையில் தற்பொழுது 23.6% ஆக குறைந்துள்ளது. இன்னும் அதிக மக்கள் தடுப்பூசி போட முன்வந்தால் தொற்று பாதிப்புகள் மேலும் குறையும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.           

Related Stories: