கோவை தேவாலயத்தில் புகுந்து சிலை உடைப்பு பைக்கில் வந்த இருவருக்கு வலை

கோவை: கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள தேவாலயத்தில் புகுந்து செபஸ்தியார் சிலையை உடைத்து சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே ‘‘ஹோலி டிரினிட்டி’’ தேவாலயம் உள்ளது. இதன் நுழைவு வாயில் அருகே உள்ள கெபியில் கண்ணாடி கூண்டில் செபஸ்தியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த செபஸ்தியார் சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து தேவாலயத்தின் துணை பங்குதந்தை பாஸ்டின் ஜோசப் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கெபியை சுற்றி துணியால் மூடினர். விசாரணையில், பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் தேவாலயத்தில் புகுந்து செபஸ்தியார் சிலையை உடைத்து தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: