நாளை முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தேசிய அளவிலான பிரசாரம்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிவிப்பு

சென்னை: நாளை முதல் ஆகஸ்ட் 15 வரை தேசிய அளவிலான பிரசாரம் நடத்தப்படும் என்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை: நமது நாடு 75 ஆண்டு கால  சுதந்திரத்தை கொண்டாட உள்ள சூழலில், நாட்டின் ஜனநாயகத்தை சூழ்ந்துள்ள ஆபத்துகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசு, கடுமையான கருப்புச் சட்டங்களை கொண்டு எதிர்கருத்துகளையும், அரசியல்  எதிர்ப்புகளையும் ஒடுக்கி வருகிறது. முந்தைய காலங்களோடு ஒப்பிடுகையில் யூஏபிஏ போன்ற கருப்புச் சட்டங்களை பிரயோகிப்பது 75 சதவீதம் அதிகரித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு மதவாத வெறுப்பு  பரவலாக்கப்பட்டு, நாட்டின் சிறுபான்மையினர் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என்கிற கருத்துகள் பொது தளங்களில் ஒலிக்க துவங்கியுள்ளது.

இதற்கு எதிரான பாரம்பரிய கட்சிகளின் பலவீனமான செயல்பாடுகள் மேலும் கவலை அளிப்பதாகவே உள்ளது. தற்போதைய இந்த ஆபத்தான சூழலில், எதேச்சதிகாரத்தை எதிர்த்து, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாத்து, மக்களாட்சியை உறுதி செய்வது என்பது மக்கள் சக்தியினால் மட்டுமே சாத்தியப்படும். எனவே  “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசிய அளவிலான பிரசாரத்தை, இந்திய  நாட்டின் ஒரு முனையான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு  தினமான ஜனவரி 26 அன்று பாப்புலர் ப்ரண்ட் துவங்க இருக்கிறது. தொடர்ந்து நாடு முழுவதும் பேரணிகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலமாக நடைபெற இருக்கிற இப்பிரசாரம், நாட்டின் 75வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். பாப்புலர் ப்ரண்ட் அமைப்பின் வரலாற்றில் இதுவரை முன்னெடுத்த பிரசாரங்களில் இதுவே மிக நீண்ட பிரசாரம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: