இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் தமிழகத்தில் 314 கோயில்களுக்கு தரச்சான்று: கோயில் அலுவலர்களுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: அறநிலையத்துறை சார்பில் பழனி தண்டாயுதபாணி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.அதாவது, 754 கோயில்களில் நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனம் நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியை செய்து வருகிறது. கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றின் தரச்சான்றுகள் 6 கோயில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில், 2021 மே 7ம்தேதிக்கு பிறகு அரசின் சீரிய முயற்சியால் 314 கோயில்களுக்கு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் 394 வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 308 கோயில்களுக்கு சான்றிதழ்களை பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 314 கோயில் செயல் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் அடையாளமாக 4 இணை ஆணையர்கள், 6 செயல் அலுவலர்களை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: