சென்னை விமானநிலையத்தில் கேப்சூல்களில் 1.07 கிலோ ஹெராயின் கடத்தல்: பெண் பயணி கைது

மீனம்பாக்கம்: சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஒரு பெண் பயணி 108 கேப்சூல்களில் மறைத்து வைத்து ₹7 கோடி மதிப்புள்ள 1.07 கிலோ ஹெராயின் கடத்தி வந்துள்ளார். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பெண் பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.   சாா்ஜாவில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு ஒரு விமானம் வந்தது. அதில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் ஏராளமான ஹெராயின் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் வந்த 148 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.   மேலும், சந்தேக நிலையில் இருந்த பயணிகளை நிறுத்தி, அவர்களின் உடைமைகளை சோதனையிட்டனர். இதில், உகாண்டா நாட்டை சேர்ந்த 29 வயதான பெண் பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் ஏதுமில்லை என வாக்குவாதம் செய்து வெளியேற முயன்றார். அவர் நடந்து செல்லும்போது, அவரது நடையில் சற்று வித்தியாசம் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த பெண் பயணியை தனியறையில் வைத்து சோதித்ததில், அவரது உள்ளாடைக்குள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 108 கேப்சூல் மாத்திரைகள் இருந்தன. அதை உடைத்து பாா்த்ததில், உள்ளே ஹெராயின் போதைபொருள் கடத்தி வந்திருப்பதை கண்டறிந்தனர். 108 கேப்சூல்களில் ₹7 கோடி மதிப்பில் 1.07 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண் பயணியை விசாரித்தபோது, அவர் உகாண்டா நாட்டை சேர்ந்த ஜுடித் டூவினோம்வெபிமெப்ஸி (29) எனத் தெரியவந்தது. அவர் கொண்டு வந்த ஹெராயின் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்பெண்ணை கைது செய்து, இந்த போதை பொருளை சென்னையில் யாருக்காக கொண்டு வந்தாா், சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா என பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: