திம்பம் மலைப்பாதையில் மர பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து-3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் :  திம்பம் மலைப்பாதையில் மர பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் குசால்நகர் பகுதியிலிருந்து நேற்று காலை மரக்கட்டைகள் பாரம் ஏற்றிய லாரி கோவில்பட்டி செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. 6வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த மரக்கட்டைகள் சாலை முழுவதும் சிதறின.

இதனால் பேருந்து, கார் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அப்போது பேருந்தில் வந்த பயணிகள், லாரி ஓட்டுனர்களிடம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால்தான் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். இதனால் லாரி ஓட்டுநருக்கும், பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இருந்த பண்ணாரி சோதனை சாவடி போலீசார் இருதரப்பினரை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் சிதறிய மரக்கட்டைகள் அகற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது.

Related Stories: