பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு; இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதம் நேரடியாக நடக்கும்.! அமைச்சர் விளக்கம்

சென்னை:  பல்கலைக் கழக, கல்லூரித் தேர்வுகள் மற்றும்  செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் பிப்ரவரி 1முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இறுதி செமஸ்டர் தேர்வு நேரடியாகத்தான் நடத்தப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று நீடித்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள் நடக்கின்றன. இந்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் தற்போது விடுமுறையில் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான தேர்வுகள் நேரடியாகத்தான் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருவதால், பல்கலை மற்றும் கல்லூரித் தேர்வுகளை எப்படி நடத்துவது என்பது குறித்து உயர்கல்வித்துறையின் சார்பில் ஆலோசிக்கப்பட்டது.

அது தொடர்பாக  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று  விளக்கம் அளித்துப் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்கெனவே இருந்த நிலவரப்படி, ஜனவரி மாதத்துக்கு பிறகு பல்கலை மற்றும் கல்லூரித் தேர்வுகளை எப்படி நடத்துவது என்று  முடிவு எடுக்க அனைத்து மாணவர்கள் அமைப்புகளுடன் கலந்து பேசினோம். அதன்படி அனைத்து வகை தேர்வுகளும் இனிமேல் நேரடியாக நடத்துவது என்று தெரிவிக்கப்பட்டது.  ஆனால், தற்போதுள்ள தொற்று நிலவரப்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை அனைத்து பல்கலை மற்றும் கல்லூரிகள் அதாவது இறுதியாண்டு மாணவர்களை தவிர பொறியியல், பாலிடெக்னிக், அரசு கலை அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் நடத்த வேண்டும். அப்போது கட்டாயம் மாணவர்களுக்கு நேரடியாகத்  தான் தேர்வு நடத்தப்படும்.

தொற்று இருந்தாலும் சுழற்சி முறையிலாவது நேரடித் தேர்வு நடத்தப்படும். 3 ஆண்டு உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டப் படிப்புகளில் 6வது செமஸ்டர் தேர்வுகள், 4 ஆண்டுகள் கொண்ட பொறியியல் பட்டப் படிப்புகளில் 8வது செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும்.  இதற்காக பெற்றோர், மாணவர்களுடன் பேசி அவர்கள் மனநிலைக்கு ஏற்ப கருத்து அறிந்து இறுதியாண்டு தேர்வு நேரடித் தேர்வுகளாக நடத்தப்படும். அப்போது தான் கல்வித்தரம் பாதிக்காது.  அதன்படி அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றின் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். கேள்வித்தாளில் எந்த மாற்றமும் இருக்காது. மாணவர்கள் அவர்கள் கல்லூரிகளில் படித்த பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் எழுதும் விடைகள் அப்போதைக்கு அப்போது அப்லோடு ஆகும். கிராம மாணவர்களுக்கு இதில் சிரமமாக இருக்கும் என்று தெரிவித்ததால், அவர்கள் அப்லோடு செய்த பிறகும் காலதாமதம் ஆனாலும் அதை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டம், கல்வித் தரம்  குறித்து 29ம் தேதி அனைத்து  கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசித்து கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பல்கலைக் கழகங்களிலும் ஒரே மாதிரியாக ஒரே முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தில் முன்பு ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்து தேர்வு நடத்தப்பட்டது. அது போல குளறுபடிகள் இல்லாமல் நடத்தப்படும். நேர்மையாக நடத்தப்படும். முழு கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும். தேர்வின் விடைகள் போன், இமெயில், போன்றவை மூலம் அனுப்பலாம். நான்கு தாள்கள் ஆனாலும் அனுப்பலாம். பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் நடைமுறையில் உள்ளவை மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்ததின் பேரில் அதற்கான பணிகள் நடக்கிறது. பாடப்புத்தகங்களைப் பற்றியும் ஆலோசித்து இடையில் ஏற்பட்ட  தடுமாற்றங்களை எல்லாம் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Related Stories: