இந்தியாவுக்கு எதிரான வகையில் செயல்படும் யூடியூப் தளங்கள் முடக்கப்படும்: ஒன்றிய அரசு எச்சரிக்கை.!

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான வகையில் செயல்படும் யூடியூப் தளங்கள் முடக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படும் யூடியூப் தளங்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தைப் பிளவுபடுத்துவது போன்ற எந்தவொரு கணக்கையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். யூடியூப் நிறுவனமே முன்வந்து இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.

முன்னதாக, டிசம்பர் 21 அன்று மத்திய அரசு மொத்தம் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை முடக்கியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இந்தத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், நாட்டின் முக்கிய விவகாரங்களான காஷ்மீர், விவசாயிகள் போராட்டம் மற்றும் ராமர் கோவில் போன்றது தொடர்பாக தவறான தகவல்களை இவை பரப்பி வருவதாகவும் புகார் எழ, அந்தக் குற்றச்சாட்டின் பேரில் மத்திய அரசு அனைத்தையும் முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர், இந்திய ராணுவம், சிறுபான்மை சமூகங்கள் போன்ற தலைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு செய்திகள் வெளியிட்ட தி பஞ்ச் லைன், இன்டர்நேஷனல் வெப் நியூஸ், கல்சா டிவி மற்றும் தி நேக்கட் ட்ரூத், 48 செய்திகள், பிக்சன்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஃபேக்ட்ஸ், பஞ்சாப் வைரல், நயா பாகிஸ்தான் குளோபல், கவர் ஸ்டோரி, கோ குளோபல் போன்ற சேனல்கள் முடக்கப்பட்டன. இந்த 20 யூடியூப் சேனல்களை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வந்தனர். மேலும் இந்த சேனல்களின் வீடியோக்கள் 55 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்தன. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் நயா பாகிஸ்தான் குழுமம் இந்த யூடியூப் சேனல்களின் வலையமைப்பைக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Related Stories: