சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம், சத்திரம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் இருக்கிறாள். கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி, சிறுமி வீட்டில் இருந்து மாயமானாள். பெற்றோர் அவளை பல இடங்களில் தேடியும்  எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பட்டாபிராம் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, கல்லாவி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (22) என்பவர், திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது.இதற்கிடையில், தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி, சிறுமியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமியை விரைவில் கண்டுபிடித்து தரும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து, சிறுமியையும், அவளை கடத்தி சென்ற சிலம்பரசனையும் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், தனிப்படை போலீசார், நேற்று முன்தினம்  தலைமறைவாக இருந்த 2 பேரையும் பிடித்து பட்டாபிராம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், சிறுமி தனது பெற்றோருடன் ஒரு ஆண்டுக்கு முன் திருவண்ணாமலையில் நடந்த திருமணத்துக்கு சென்றார். அப்போது, சிறுமிக்கும் சிலம்பரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசினர். அதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இதைதொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் சிலம்பரசன், பட்டாபிராம் வந்து சிறுமியை சந்தித்துள்ளார். பின்னர், அவர் சிறுமியை திருமண ஆசை காட்டி சொந்த ஊருக்கு கடத்தி சென்று, அங்கு சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக, சிறுமி கர்ப்பமானாள். தற்போது சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறாள் என தெரிந்தது.இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்டு திருநின்றவூர், பாக்கம் அருகில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். பின்னர், சிலம்பரசனை கைது செய்து, வேறு ஏதேனும் குற்ற வழக்கில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.

Related Stories: