பென்னிகுக் குறித்த முதல்வரின் கருத்துக்கு மறுப்பு 5 மாவட்ட விவசாய சங்கம் பெண் கவிஞருக்கு கண்டனம்

கம்பம்:  பென்னிகுக் தன்னுடைய சொத்துகளை விற்று பெரியாறு அணையைக் கட்டினார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்ற கவிஞர் வெண்ணிலாவுக்கு ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்கின் 181வது பிறந்தநாள் கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. தன்னுடைய சொத்துகளை விற்று பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுக்கின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பர்லி நகரில் அவருக்கு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் அறிவித்தார்.

இந்நிலையில், ‘‘பெரியாறு அணை கட்ட பென்னிகுக் தன் சொத்தக்களை விற்றாரா? பென்னிகுக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை, பென்னிகுக் குறித்து முதல்வர் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல’’ என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் கவிஞர் வெண்ணிலா சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தார். இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘கவிஞர் வெண்ணிலாவின் கருத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பிலும், 10 லட்சம் விவசாயிகளின் சார்பிலும் நிராகரிக்கிறோம். அவர் பென்னிகுக் பற்றி எழுதிய தவறான வாசகங்களை தானே மறுப்பதோடு, எழுதியதற்கான விளக்கத்தையும் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். இல்லையேல் ஐந்து மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், தகுந்த சான்றுகளோடு கவிஞர் வெண்ணிலா மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: