மறைமலைநகர் அருகே தந்தை, 2 மகள்கள் தற்கொலை

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே இன்று காலை ஒரு விவசாய கிணற்றில் ஒருவர் தனது 2 மகள்களுடன் கட்டி பிடித்த நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். சென்னை புதுப்பேட்டை, காஞ்சி முதலி தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (44). இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, 2வதாக அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி (30) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, பூஜா என்ற 2 மகள்கள்.

இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் ஞானவேல் மற்றும் அவரது 2 மகள்கள் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போய்விட்டனர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து எழும்பூர் போலீசில் ஜெயந்தி புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், மறைமலைநகர் அருகே கடம்பூர் பகுதியில் இன்று காலை விவசாய கிணற்றில் ஒருவர் 2 குழந்தைகளுடன் கட்டி பிடித்த நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் இறங்கி, 3 சடலங்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். அந்த சடலங்களை போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, ஞானவேல் மற்றும் அவரது 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், இதுகுறித்து தகவலறிந்ததும் எழும்பூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொள்கின்றனர். தனது கணவர் மற்றும் 2 மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து ஜெயந்தி கதறி அழுதது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: