தேசிய, சர்வதேச அளவில் ஜம்னாலால் பஜாஜ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, ‘ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை’ சார்பில் சமூக சேவை, ஊரக வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவில், ‘ஜம்னாலால் பஜாஜ் விருது’ வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதேபோல், வெளிநாடுகளில் காந்திய சிந்தனையை ஊக்குவிப்பவர்களுக்கும் சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2022ம்  ஆண்டுக்கான விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என இந்த அறக்கட்டளை அறிவித்துள்ளது. கிராமப்புற இந்தியாவில் தன்னம்பிக்கை சமூகத்தை உருவாக்குவதற்காக மகாத்மா காந்தியின் ஆக்கப்பூர்வமான திட்டங்களின் ஏதேனும் அல்லது அனைத்து மேம்பாட்டு பணிகளிலும் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்களுக்கு, கிராமப்புற மக்களின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதலில் சிறந்த பங்களிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலனில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு (பெண்கள் மட்டும்) தேசிய விருதும், வெளிநாடுகளில் காந்திய சிந்தனையை மேம்படுத்த பாடுபட்டவர்களுக்கு சர்வதேச விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்வாகும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்று மற்றும் கோப்பை வழங்கப்படும். 2022ம் ஆண்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு இந்த மாதம் 31ம் தேதி கடைசி நாளாகும். விருதுக்கான விண்ணப்பங்களை www.jamnalalbajajawards.org என்ற இணையதளத்தில் சமர்பிக்கலாம். விருது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.jamnalalbajajfoundation.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: