மாநில மக்களுக்கு எதிராக செயல்படும் நிலையில் தமிழகத்துக்கு கவர்னர் பதவி தேவையா?: கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க ஒன்றிய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கும் போக்கை ஆளுநர் மூலம் ஒன்றிய பா.ஜ.அரசு செய்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் எத்தகைய வரையறையை பின்பற்றுகிறார் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

தமிழக சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது தமிழகத்தின் இறையாண்மைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் நேர் எதிரானதாகும். இதன்மூலம் ஒன்றிய பா.ஜ.அரசின் தமிழக விரோத போக்கிற்கு ஆளுநர் துணை போகிறார்.அதேபோல, வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவை ஒப்புதல் தருவது போல் தந்து நீதிமன்றத்தால் ரத்து செய்ய காரணமாக இருக்கும் ஆளுநர், இது குறித்து சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து பெற்றாரா. மாநில மக்களுக்கு எதிராகச் செயல்படும் போது, அந்த பதவி தேவை தானா என்ற கேள்வி தானாகவே எழுகிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கின்ற வகையில் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் செயல்பட்டு வருகிறது.

Related Stories: