அசுத்தமாக உலா வரும் மும்பை ரயில்கள்: தென் மாவட்டங்களுக்கு வருவோர் திண்டாட்டம்

நெல்லை: தென் மாவட்டங்களுக்கு வரும் மும்பை ரயில்கள் பராமரிப்பின்றி அசுத்தமாக காட்சியளிப்பதால், பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை, தாராவி, மட்டுங்கா, கல்யாண், புனே உள்ளிட்ட இடங்களில் தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் என தங்கள் சொந்த ஊர்களுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரத்தில் 6 நாட்கள் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்களில் ஏறி இரு இரவுகள் பயணித்து அதிகாலை நேரத்தில் தென்மாவட்டங்களுக்கு வந்து சேர்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு வரும் மும்பை ரயில்கள் சமீபகாலமாக உரிய பராமரிப்பின்றி காணப்படுவதாக கூறப்படுகிறது. தொலை தூர ரயில்களில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைப்பதோடு, பயணிகள் பயணிக்க வசதியாக பெட்டிகளும் இருக்க வேண்டும். மும்பையில் இருந்து வரும் ரயில்கள் சமீபகாலமாக அசுத்தமாக குப்பை கூளமாக காட்சியளிப்பதோடு, புகையிலை கறைகளும் அதிகம் காணப்படுகின்றன. இதனால் பயணிகள் அதிருப்தியோடு பயணித்து வருகின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் பெட்டிகள், பின்னர் அங்கிருந்து மேற்கு வங்க மாநிலம், ஹவுராவுக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர் மீண்டும் மும்பை வரும் ரயில் பெட்டிகள், மறுமார்க்கமாக நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யாமல் அப்படியே அனுப்பி விடுகின்றனர். இதனால் தென்மாவட்டங்களுக்கு வரும் பயணிகள் மும்பை ரயில்களில் வேண்டா வெறுப்புடன் பயணிக்க வேண்டியதுள்ளது. ரயில் பெட்டிகள் நோய் பரப்பும் கூடாரம் போன்று துர்நாற்றம் வீசுகின்றன.

சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக பயணிக்க வேண்டிய பெட்டிகளில் துர்நாற்றம் காரணமாக பயணிகள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத நிலையும் காணப்படுகிறது. எனவே மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில் பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் நன்கு பராமரிப்பு செய்ய முன்வரவேண்டும் என தென் மாவட்ட ரயில் பயணிகள் விரும்புகின்றனர்.

Related Stories: