பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணை கொண்டவர் வள்ளலார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை : `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் நினைவு தினம் இன்று. உண்மையில் இதை நினைவு நாள் என்றே சொல்லக்கூடாது. ராமலிங்க அடிகளார் இறைவனுடன் ஐக்கியமான நாள் என்றுதான் சொல்லவேண்டும்.  

கடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான்  வள்ளலார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்றவர், சென்னை, கருங்குழி, வடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் வசித்து வந்தார். கருங்குழியில் மட்டும் 14  ஆண்டுகள் தங்கி இருந்து திருவருட்பா என்னும் அருட்பாக்களை இயற்றினார்.

தான் உணர்ந்த, இறைவன் ஒளி வடிவமானவர் என்ற பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டி, சத்திய ஞான சபையைத் தோற்றுவித்தார்.ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதே ஆகச் சிறந்த இறைப்பணி என்பதில் எள்முனையளவும் மாறாத கருத்தைக் கொண்டிருந்தார் வள்ளலார்.சத்திய ஞான சபைக்கு அருகிலேயே தர்ம சாலையை அமைத்து அன்னதானம் வழங்க வழிவகை செய்தார். இன்றுவரை அங்கு அன்னதானம் சிறப்பாக  வழங்கப்படுகிறது. வடலூர் அருகே இருக்கும் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் ஸித்தி அடைந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாடிய பயிரைக் கண்டால் மனம் வாடும் இரக்கமும், பட்டினி வயிறுகளின் பசியாற்றிட அணையா அடுப்பு மூலம் உணவளிக்கும் கருணையும், சாதி பேதமற்ற சமரச சன்மார்க்க நெறியும் கொண்டவரான வடலூர் #வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களின் நினைவு போற்றி, அன்பும் மனிதநேயமும் தழைத்திடச் செய்திடுவோம்! என்றார்.

Related Stories: