அலங்கார ஊர்திகள் பங்கேற்பது குறித்த முடிவை நிபுணர் குழுவே தீர்மானிக்கும், ஒன்றிய அரசு அல்ல; ஊர்தியை நிராகரித்ததற்கு விளக்கம்.!

டெல்லி: தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. எனினும், அலங்கார அணிவகுப்பிற்கு தமிழ்நாடு அரசின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இதனால் கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசின் பொதுப்பணி துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், அலங்கார ஊர்திகள் பங்கேற்பது குறித்த முடிவை நிபுணர் குழுவே தீர்மானிக்கும். ஒன்றிய அரசு அல்ல என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நேரக் கட்டுப்பாடு காரணமாக 56 விண்ணப்பங்களில் 21 மட்டுமே விழாவில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகளுக்கான விண்ணப்பங்கள் உரிய விவாதங்களுக்கு பின்னரே நிராகரிக்கப்பட்டுள்ளன எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசாங்கத்தின் தலைமையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்பட்டன எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் மத்திய அரசின் இந்த செயலுக்கு திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது எனவும் இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது எனவும் கூறியிருந்தார். மேலும், இந்தியா வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி, ஒன்றிய அரசு உடனடியாக ஜனநாயகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இது தமிழக மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: