நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம்: ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. நேற்று ஒரு நாளில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆடை தயாரிப்பிற்கு மிக முக்கிய மூலப்பொருளான நூல் விலையை நூற்பாலைகள் கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது.  

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உச்சகட்டமாக ஒரு கிலோவுக்கு ரூ.50 வரை நூல் விலை உயர்ந்தது. இதன் பின்னர் தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஏற்று நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. இதற்கிடையே நடப்பு மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்தது. இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து 17ம் தேதி (நேற்று), 18ம் தேதி (இன்று) ஆகிய 2 நாட்கள் பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்) உள்பட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி திருப்பூரில் நேற்று முதல் நாளாக பின்னலாடை நிறுவனங்கள் இயக்கப்படாமல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடந்தது. தொழிலாளர்கள் நிறுவனங்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருந்தனர். பின்னலாடை நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால், நேற்று ஒரு நாளில் மட்டும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என ரூ.200 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) 2வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.

* இன்று ரயில் மறியல்

நிட்மா (பின்னலாடை துணி உற்பத்தியாளர்கள் சங்கம்) தலைவர் அகில் ரத்தினசாமி அளித்த பேட்டியில், நூல் விலை உயர்வை கண்டித்து நிட்மா சார்பில் திருப்பூர் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  நூல் விலை உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் பாதிக்கும் என்பதால் ஒன்றிய அரசு நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் நூலை போட்டி நாடுகள் வாங்கி அதிகளவில் உற்பத்தி செய்து, நம் வர்த்தகர்களை கைவசப்படுத்துகின்றனர். வங்கதேசம் உள்பட பல நாடுகள் முன்னேறி வருகின்றன. இந்திய பருத்தி கழகம், விவசாயிகளிடம் இருந்து பருத்தியை வாங்கி வியாபாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் விநியோகிக்கக்கூடாது. நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும். நூல் விலையை 6 மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். நூற்பாலைகள் உள்நாட்டு தேவைக்கு பிறகே, நூலை ஏற்றுமதி செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: