அரசு பணியில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பணியில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு பணி மூப்பு, பதவி உயர்வுகான இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த சட்டவிதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘ அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையே உச்ச நீதிமன்றமும் கூறியிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என டி.என்.பி.எஸ்.சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணியில் இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்க முடியாது.

மேலும் இந்த விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான் கண்டிப்பாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அடுத்த 12 வாரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் இதில் நீதிமன்ற அவமதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்து ஜனவரியில் விசாரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி அமர்வில் இல்லாதால், நாளை(இன்று) அல்லது அதற்கு மறுநாள் பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்து ஒத்திவைத்தார்.

Related Stories: