குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் 75வது குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தினத்தன்று தலைநகர் புதுடெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரை உள்ள ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு உள்பட பல்வேறு மாநிலங்களின் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்தாண்டு புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தாலும் குடியரசு தின விழாவுக்கு பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிபுணர் குழு செய்து வருகிறது. இந்நிலையில் மேற்குவங்கத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘குடியரசு தினவிழாவில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இது தவிர, நாடு முழுவதும் மொத்தமுள்ள 30 மாநிலங்களில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.தென்மாநிலங்களை பொறுத்தவரை பாஜ ஆளும் கர்நாடகாவை தவிர தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய அனைத்து மாநிலங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: