இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது : ஒன்றிய அரசு

டெல்லி : இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. எவாரா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் அவசியத்திலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றை கருத்தில் கொண்டே பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பத்திரிக்கை, சமூகவலைதளம் மற்றும் தொலைக்காட்சி உள்பட பல்வேறு வழிமுறைகள் மூலம்  நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால், தனிப்பட்ட நபரின் விருப்பத்துக்கு மாறாகவும் தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது.அதேபோல், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி சான்றிதழை கையோடு எடுத்துச் செல்லுமாறு எவ்வித உத்தரவையும் ஒன்றிய அரசு பிறப்பிக்கவில்லை, என்று தெரிவித்துள்ளது.

Related Stories: