5 நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை எதிரொலி: திருச்செந்தூர் கோயில் வெறிச்சோடியது

திருச்செந்தூர்: ஒமிக்ரான் பரவல் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு  நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் மற்ற காலபூஜைகள் நடந்தன.  

இந்த ஆண்டு ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் (வெள்ளி) முதல் வருகிற 18ம் தேதி (செவ்வாய்) தைப்பூசம் வரை 5 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும், கடந்த 13ம் தேதி வரை திருச்செந்தூர் கோயிலுக்கு காவடி எடுத்தும், அலகுகுத்தியும், பால்குடம், பறவைகாவடி எடுத்து வந்தும் சுவாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.  

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வழக்கமாக பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், இந்த

ஆண்டு மட்டும் பாதி தூரம் நடந்து வந்த நிலையில், அரசின் தடை காரணமாக தங்கள் பயணத்தை பஸ்கள், கார், வேன்களில் மாற்றி வேகமாக வந்து நேர்த்திக்கடனை முடித்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக முருக பக்தர்கள் யாரும் வரவில்லை. பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுப்பால் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: