ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு காசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

*கூட்டத்தை ஒழுங்குபடுத்திய போலீசார்

சென்னை : முழு ஊரடங்கு மற்றும் விடுமுறை காரணத்தால் மீன் வாங்குவதற்கு நேற்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவியத் தொடங்கினர். இதனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 ஏற்கனவே, கடந்த 6ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் நேற்று விடியற்காலை 5 மணிக்கு பிறகு சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

மேலும் குறைந்த அளவிலான விசைப்படகுகள் மட்டும் கடலுக்கு சென்று வந்த நிலையிலும் விற்பனைக்காக சின்ன நண்டு, இறால் வகைகள், சூரை, வஞ்சிரம், சுறா, களவாண், கோலா, சங்கரா, கடம்பா உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் வந்திருந்தன. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் மீன்கள் விலை உயர்ந்தே காணப்பட்டது.

அதன்படி நண்டு கிலோ ₹200க்கும், இறால் கிலோ ₹300 க்கும், டைகர் இறால் கிலோ ₹800க்கும், சூரை சிறிய வகை மீன்கள் கிலோ ₹140 க்கும், பெரிய வகை சூரை மீன்கள் கிலோ ₹270 க்கும், வஞ்சிரம் கிலோ ₹500 முதல் ₹600 க்கும், சுறா சிறிய வகை மீன்கள் கிலோ ₹230 க்கும், பெரிய வகை சுறா கிலோ ₹450க்கும், களவாண் வகை மீன் சிறிய வகை கிலோ ₹270 க்கும், பெரிய வகை களவாண் மீன் ₹500 க்கும், கோலா மீன் கிலோ ₹300 க்கும், சங்கரா மீன் கிலோ ₹350 க்கும், கடம்பா மீன் கிலோ ₹350 க்கும், விரால் மீன் சிறிய வகை கிலோ ₹340 க்கும், பெரிய வகை விரால் மீன் ₹650க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.  

கொரோனா பரவலை தொடர்ந்து மீன் சந்தையில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் காலை 6 மணிக்கு பிறகு மீன்கள் இறங்குதளத்தில் வியாபாரிகளுக்கான விற்பனை நிறுத்தப்பட்டது. மீன்மார்க்கெட்டின் பழைய மீன்விற்பனை கூடம் இருந்த இடத்தில் சில்லறைக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹500 அபராதமும், கூட்டமாக யாரும் இருக்க வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கூட்டத்ைத கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: