ஞாயிறு முழு ஊரடங்கால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதிக்கு மாற்றம்

மதுரை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ம் தேதிக்கு பதிலாக மறுநாள் 17ம் தேதி நடைபெறும் என மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளார். இது குறித்து மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் அளித்த பேட்டி: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் 14 முதல் 16ம் தேதி வரை நடத்த  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக வரும் 16ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அன்றைய தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பல சிக்கல் ஏற்படும் என்பதால், ஊர் மக்கள், விழா குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம். இதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மறுநாள்  17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வழக்கமான மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சிறப்பாக நடத்த உள்ளோம். வீரர்கள், காளைகளை ஆன்லைனில் பதிவு செய்வது நேற்று மாலை 3 மணிக்கு துவங்கியது. இன்று மாலை 5 மணி வரை நடைபெறும். ஜல்லிக்கட்டில் பங்கேற்பது தொடர்பாக முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யலாம். ஆன்லைன் பதிவு ஓரே நாளில் நடைபெறும். பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே பாஸ் வழங்கப்பட உள்ளது. பாஸ் இல்லாமல் யாரும்  அனுமதி இல்லை. அந்தந்த பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் வரலாம். இவ்வாறு கூறினார்.

Related Stories: