முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் எந்த பிரச்னை பற்றி விசாரிக்க வேண்டும்: அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் எந்தெந்த விஷயங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற அறிக்கையை தாக்கல் செய்ய தமிழகம், கேரளா மற்றும் பிற மனுதாரர்கள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் நாளிதழில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த சென்னையில் உள்ள தேசிய தென்மண்டல பசுமை தீர்பாயம், கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், ‘மேகதாதுவில் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகா அரசு அணை கட்டுகிறதா என்று ஆய்வு செய்ய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இதையடுத்து, அது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், இதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது அணை விவகாரத்தில் அதனை ஆய்வு செய்வதற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ள ஆய்வு குழுவை கலைத்தது மட்டுமின்றி, அந்த உத்தரவுக்கும் தடை விதித்தது. இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் கடந்தாண்டு ஆகஸ்ட் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு ஆகிய வழக்குகளை இணைத்து விசாரிக்கப்படும்,’ என தெரிவித்தது.

இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் உமாபதி, வழக்கறிஞர் குமணன் ஆகியோர், ‘மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக் கூடாது. இரண்டும் வெவ்வேறு வழக்குகள்,’ தெரிவித்தனர். இதேபோன்று, கர்நாடகா தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருமாநில கோரிக்கைகளையும் ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், மேகதாது தொடர்பான வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மனுவை எடுத்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் எந்தெந்த விஷயங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அதனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளா மேலும் மற்ற மனுதாரர்கள் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து எந்தெந்த விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு முடிவுக்கு வந்து, அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர். மேலும், வழக்கை பிப்ரவரி 2வது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: