அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டுகொள்ளாமல் விராலிமலையில் கூடிய ஆட்டுச்சந்தை-தொற்று பரவும் அபாயம்

விராலிமலை : விராலிமலையில் நேற்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு கூடிய ஆட்டுச்சந்தையால் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெருகிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று கூடிய திங்கள்கிழமை வாரச்சந்தையில் அதிகாலை முதலே ஆடு வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. கரூர், குளித்தலை, திருச்சி, குளத்தூர், தேனி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர், இறைச்சி கடைக்காரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்டுச் சந்தையில் குவிந்தனர்.

இதில் 99 சதவீதம் பேர் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறையான முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட எதையும் பின்பற்றாமல் ஆடுகளை விற்றும், வாங்கியும் சென்றனர். பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு முயற்சியுடன் பல்வேறு முன்னெடுப்புகள் எடுத்து வரும் இந்த சூழலில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின்பேரில் வருவாய் துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறையினரும் விராலிமலை சுற்றுப்பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அவ்வழியே வரும் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் கண்டிப்புடன் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories: