கொரோனா கட்டுப்பாட்டு விதிமீறல் பொங்கல் பொருட்கள் வாங்க கடை வீதியில் குவிந்த பொதுமக்கள்-மாஸ்க் அணிய விழிப்புணர்வு தேவை

பெரம்பலூர் : கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி பொங்கல் பொருட்கள் வாங்க கடை வீதியில் குவிந்த பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வந்துள்ளனர். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் பெருந்தொற்று 3வது அலையாக பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை (9ம் தேதி) முழு ஊரடங்கை அறிவித்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் வணிகர்கள், சிறி வியாபாரிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இருந்தும் 14ம்தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான மளிகை பொருட்களை வாங்கவும், புத்தாடைகளை வாங்கவும், மண், பித்தளை பானைகள், அடுப்பு, கோலத்திற்கு வண்ணப்பொடி, மாடுகளுக்கு தேவையான மூக்கனாங் கயிறு, சலங்கைகள் வாங்க ஏதுவாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர் நகருக்கு திரண்டு வந்ததால் நகரின் முக்கிய பகுதிகளான பெரிய கடைவீதி, பழைய பஸ் ஸ்டாண்டு, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளி வாசல் தெரு, என்எஸ்பி ரோடு, புது பஸ் ஸ்டாண்டு, வடக்குமாதவி ரோடு, எளம்பலூர் ரோடு, வெங்கடேச புரம் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதி வருகிறது.

இதனால் துறையூர் சாலையில் உள்ள பெரிய கடைவீதியில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இடையே கட்டுப்பாடின்றி பொதுமக்கள் கடைகளுக்கு குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்வதால் போக்குவரத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஸ்தம்பித்து வருகிறது. இதனை போக்குவரத்து போலீசார் மூலம் 14ம் தேதி வரை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி உத்தரவிட வேண்டுமென பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: