இரும்பு நிறுவன கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்-திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் :  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் தொலைபேசி மூலமாக தங்களது குறைகளை தெரிவித்தனர். சிலர் நேரடியாக வந்து மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெட்டியில் போடவும் வசதி செய்யப்பட்டிருந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தலைமையில் விவசாயிகள்  மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தாராபுரம் வட்டம் வடுகபாளையத்தில் அமைய உள்ள இரும்பு நிறுவனத்தை சுற்றியுள்ள சங்கராண்டாம்பாளையம், சிறுகிணறு, சூரியநல்லூர், கொலூமங்குலி, கண்ணாங்கோவில் உள்பட பகுதிகளில் காற்று மாசு மற்றும் நீர் மாசு ஏற்படும். இதனால் வேளாண்மையும் பாதிக்கப்படும்.  இரும்பு நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட கலெக்டர் வினீத், தாராபுரம் ஆர்டிஓ மற்றும் தாராபுரம் தாசில்தார் ஆகியோருக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இரும்பு நிறுவன கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி முற்றுகை போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் தாராபுரம் தாசில்தார், ஆர்டிஓ ஆகியோர்களின் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட இரும்பு நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஆவணமும் நிறுவனம் சார்பில் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இரும்பு நிறுவனம் பேச்சுவார்த்தை சம்பவங்களை மறைத்து, பாதிக்கப்பட்ட மக்களை தரப்பில் வழக்கில் சேர்க்காமல் போலீசார் பாதுகாப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட இரும்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கை மற்றும் வேளாண் நிலத்தை தரிசு நிலம் என வகைப்பாடு செய்ததற்கான விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்கள், கடித போக்குவரத்துகள், கள ஆய்வறிக்கைகள் உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள் வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டமும் நடந்தது. இதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்புறத்தில் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  

மடத்துக்குளம் பாப்பான்குளம் சாலரப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில்.‘‘எங்களது விவசாய நிலத்திற்கு அருகே கல்குவாரி இயங்கி வருகிறது. அந்த கல்குவாரியில் இருந்து வெடிமருந்து ரசாயனம் கலந்த நச்சு ஊற்றுநீர் இரவு,பகலாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் விவசாய நிலத்தில் புகுந்து பயிர் அனைத்து அழுகிவிட்டன. திருமூர்த்தி மலை அணை 2-ம் ஆயக்கட்டு பாசனம் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் வருவதால், இந்த வருடம் நீர் வந்தும் எங்களால் முறையாக விவசாயம் செய்ய முடியவில்லை.

அனைத்து பயிர்களும் கல்குவாரி நீர் புகுந்து அழுகிவிட்டன. கல்குவாரி நீரை நேரடியாக வெளியேற்றக்கூடாது என்ற விதிமுறையை மீறிப்படுகிறது. சட்ட விதிகளை மீறி பாறைகளை உடைக்கப்படுகிறது.  கல்குவாரி நீர் விவசாய நிலத்தில் தேங்கி வாகனம் சென்று விவசாய பொருட்களை எடுத்துவர முடியாத நிலை உள்ளது. எனவே கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நச்சுநீரால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியினர் கொடுத்த மனுவில்,‘‘பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு குளறுபடி நடந்துள்ளது என குற்றம்சாட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பிரதமருக்கு பாதுகாப்பை முழுமையாக பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டியது எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரிடம்தான் இருக்கிறது.

இந்த பொறுப்பை எஸ்பிஜி சரியாக நிறைவேற்றியதா? என்ற கேள்வி தானாக எழுகிறது. மேலும், இது ஏற்கனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.  பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் மூலமாக கவர்னருக்கு, மனு கொடுக்க வேண்டும் என மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இந்த மனுவை கொடுக்கிறோம்’’ என்று கூறியிருந்தனர்.ஊத்துக்குளி விருமாண்டம்பாளையத்தை சேர்ந்த பிரியா (40) என்பவர் கொடுத்த மனுவில், ‘‘நான் அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாரப்பாளையத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் நிலம் வாங்கி தருவதாக என்னிடம் ரூ.20 கோடி வரை நகை மற்றும் பணத்தை வாங்கினர். ஆனால் எனக்கு நிலமும் கொடுக்கவில்லை. எனது பணத்தையும் மோசடி செய்துவிட்டார்கள். இது குறித்து அவர்களிடம் கேட்டால் அடியாட்களுடன் வந்து என்னை தாக்குகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

Related Stories: