ஊரடங்கால் வெறிச்சோடிய மாவட்டம்

சத்தியமங்கலம் :  ஒமிக்ரான்  தொற்று வேகமாக பரவுவதால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. அதன்ஒருபகுதியாக, நேற்று முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. இதனால் பால் பூத், பெட்ரோல் பங்க், மருந்துக்கடைகள்  என விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டது. முழு  ஊரடங்கு காரணமாக கோவை சாலை, கோபி சாலை, மைசூர் சாலை, மேட்டுப்பாளையம்  சாலை, அத்தாணி சாலை உள்ளிட்ட சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி  காணப்பட்டது.

பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பஸ் நிலையம்  வெறிச்சோடியது.  தேநீர் கடைகள், உணவகங்கள், இறைச்சிகள் கடைகள் மூடப்பட்டன.   பவானி ஆற்றுப்பாலம் சந்திப்பில் போலீசார் முகாமிட்டு அரசால்  அனுமதிக்கப்பட்ட நபர்கள்  அடையாள அட்டை காண்பித்தால்  மட்டுமே  அனுமதிக்கின்றனர்.

 தேவையின்றி சுற்றிய 4 பேர் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது.  இதேபோல், புஞ்சைபுளியம்பட்டி,  பவானிசாகர், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கால் வெறிச்சோடியது.

பவானி: பவானி நகராட்சி தினசரி மார்க்கெட் விடுமுறை அளிக்கப்பட்டது. பஸ்கள் இயங்கவில்லை. வழக்கமாக மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பேருந்து நிலையம் அந்தியூர் மேட்டூர் பிரிவு பாத்திரக்கடை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்துக்கடைகள்,  பால் விற்பனை நிலையங்கள்,  மருத்துவமனைகள் திறந்திருந்தன.

போலீசார் பழைய பாலம், அந்தியூர் பிரிவு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவரிடம் விசாரித்து பின்னர் அனுமதித்தனர். பவானி சங்கமேஸ்வரர் கோயில், கூடுதுறை பகுதியிலும் பூட்டப்பட்டது. பரிகார வழிபாடுகள் நடைபெறவில்லை. இதேபோன்று, அம்மாபேட்டை, சித்தார் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.

கொடுமுடி: கொடுமுடி பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம், கடைவீதி, மணிக்கூண்டு பகுதிகளில் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், ஏ‌டி‌எம் மையங்கள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கின. ஒரு சில உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் நடந்தன. சாலைபுதூர், கணபதிபாளையம் ஒத்தக்கடை மற்றும் கொடுமுடி  சுற்றுவட்டார பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.

மகுடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நடை சாத்தப்பட்டிருந்தன. சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.அந்தியூர்: அந்தியூர் பஸ் நிலையம்,  ரவுண்டானா, அத்தாணி பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பால் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது.  விவசாய பணிகளுக்கு செல்பவருக்கு போலீசார் உரிய விசாரணையுடன் அனுமதித்தனர்.

விவசாயம் சார்ந்த பணிகளுக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்பதால் வயல்வெளிகளில் விவசாயிகள் பயிர்களுக்கு மருந்து அடித்தல், இரண்டாம் களையெடுப்பு பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

Related Stories: