கொரோனா தொற்று பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு: சி.எம்.டி.ஏ அதிகாரிகள், மாநகராட்சியினர் நடவடிக்கை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி, பூ , பழம் , உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டில், கொரோனா தொற்று பரவலை தடுக்க சி.எம்.டி.ஏ அதிகாரிகள், மாநகராட்சியினர், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழக அரசின் உத்தரவின்படி, சிஎம்டிஏ சார்பில், கொரோனா விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதே போல் காய்கறி, பூ , பழம், உணவு தானியம் ஆகிய மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முழு ஊடரங்கு என்பதால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அனைத்து வியாபாரிகளின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஒரு நாள் கோயம்பேடு மார்க்கெட்  விடுமுறை என அறிவித்து இருந்தது. இதையடுத்து, நேற்று காலை 8 மணி அளவில் கோயம்பேடு மார்க்கெட் முதன்மை அலுவலர் சாந்தி மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் காய்கறி , பூ , பழம் , உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி தெளித்தனர். இது குறித்து, கோயம்பேடு முதன்மை அலுவலர் சாந்தி கூறியதாவது: ‘‘வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் என அனைவரும்  கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற  தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதில், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் மார்க்கெட்டில் இருந்து வெளியேற்ற படுவார்கள்.’’ என தெரிவித்தார்.

Related Stories: