சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக பாசனத்துக்கு பயன்படாத 120 ஏரிகளின் கொள்ளளவை அதிகரித்து கூடுதலாக 20 டிஎம்சி நீரை சேமித்து வைக்க திட்டம்: தலைமை செயலாளருடன், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக 20 டிஎம்சி நீரை சேமித்து வைக்க நீர்வளத் துறை அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகள் பூர்த்தி செய்து வருகிறது. 11.75 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகள் வடகிழக்கு பருவமழையின் மூலம் கிடைக்கும் நீரை தான் நம்பி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னை மாநகர மக்களுக்கு தினசரி 80 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

ஆனால் வட கிழக்கு பருவமழை பொய்த்து விட்டால், ஏரிகளில் நீர் தேவையான அளவு இருக்காது. அதேசமயம், கூடுதலாக மழை பெய்தாலும் அவற்றை சேமிக்க முடியாது. தற்போது பெய்த மழையில் கூட 25 டிஎம்சி வரை வீணாக கடலில் கலந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்கும் வகையில் கூவம், பாலாறு, கொசஸ்தலை ஆறு, அடையாறு, ஆரணியாறு உள்ளிட்ட ஆற்றுப்படுகைகளில் 6 கதவணைகள் மற்றும் 9 தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது. மேலும் பூண்டி ஏரியின் கொள்ளளவை 2 டிஎம்சி வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் பாசனத்துக்கு பயன்படாத ஏரிகளை குடிநீர் ஏரிகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், நேமம் ரெட்டேரி, அயனம்பாக்கம் ஏரி, கொரட்டூர், மாதவரம் உட்பட 120 ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.5 டிஎம்சி முதல் ஒரு டிஎம்சி வரை ஏரிகளில் உள்ள நீரை சேமித்து வைக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 20 டிஎம்சி நீர் வரை சேமித்து வைக்க முடியும். இதன்மூலம் வருங்காலங்களில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இதற்கான முதற்கட்ட அறிக்கையை தயார் செய்து நீர்வளத்துறை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில் முதற்கட்ட அறிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தத் திட்டம் தொடர்பாக ‘பவர் பாயிண்ட்’ மூலம் நீர்வளத்துறை அதிகாரிகள் தலைமைச் செயலாளருக்கு விளக்கினர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மழை காலங்களில் பெரும் வெள்ளத்தை தடுக்கும் பணியை செய்கிறது என்பது குறித்து அவரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக மழையால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதை  தடுக்க முடியும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: