நீட் விலக்கு சட்ட மசோதாவை அனுப்பாமல் வைத்துள்ள ஆளுநரின் செயல் தமிழ்நாடு சட்ட பேரவையை அவமதிப்பதாகும்: திருமாவளவன் அறிக்கை

சென்னை: நீட் விலக்கு சட்ட மசோதாவை அனுப்பாமல் வைத்துள்ள ஆளுநரின் செயல் தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதிப்பதாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்புமாறு ஆளுநரிடம் வழங்கப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் எவ்வித காரணமுமின்றி முடக்கி வைத்துள்ள தமிழ்நாடு ஆளுநரின் செயல் தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிப்பதாகும். இவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை குறித்து முறையிடுவதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்ட அனைத்துக் கட்சி குழுவினருக்கு நேரம் ஒதுக்காமல் ஒரு வார காலம் டெல்லியில் காத்திருக்கச் செய்து அவமதித்த இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தமிழ்நாட்டில் 400க்கும் அதிகமான தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு சுமார் 5750 கோடி சம்பாதிப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 99% பேர் இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள்.இந்த மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த எந்தவொரு சட்டமும் நமது மாநிலத்தில் இல்லை. எனவே இந்த பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: