கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்; பேரவையில் வெளிநடப்புக்கு பின் எடப்பாடி பேட்டி

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள்  நடைபெற்று இருந்தால்,  அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர  கூட்டுறவு சங்கங்களை  கலைக்கக் கூடாது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து,  அவைக்கு வெளியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம்  கூறியதாவது:  சட்டப்பேரவையில், 1983ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்  சங்கங்களின் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்ததோடு, அந்த சட்ட முன்வடிவை  எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

5 ஆண்டுகள் ஆயுட்காலம்  உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிலையை 3 ஆண்டாக குறைப்பதாக சட்டமுன் வடிவு  கொண்டு வந்திருக்கிறார்கள். அதை எதிர்த்துள்ளோம். ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் தவறு ஏதும்  நடைபெற்றால், அந்த கூட்டுறவு சங்கத்தை மட்டுமே முறையாக விசாரணை மேற்கொண்டு  நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தலைவரையோ அல்லது இயக்குநரையோ மட்டும்  நீக்க முடியுமே தவிர,  அனைத்துக் கூட்டுறவு சங்கங்களின் பொத்தாம்பொதுவாக  அதன் ஆயுட்காலத்தை 3 ஆண்டாக குறைக்க தற்போதுள்ள சட்டத்தில் இடமில்லை. கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடைபெற்று இருந்தால் அவர்களின் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர கூட்டுறவு சங்கங்களை கலைக்கக் கூடாது.

ஸ்மார்ட் சிட்டி பற்றி முதல்வர் கருத்து சொல்லி,  விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என சொல்லி இருக்கிறார். இந்த திட்டத்தில்  முறைகேடு நடந்தது போலவும், இதற்கு ஒரு விசாரணை குழு அமைப்பது போலவும்  சொல்லி இருக்கிறார். ஏரியா பேஸ்டு டெவலப்மென்ட் என்ற ஒன்றிய அரசின் திட்ட  அடிப்படையில் தான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில்  எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை.   பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்படும் என்று  அறிவித்து விட்டு 15, 16 பொருட்கள் மட்டுமே கிடைப்பதாக மக்கள்  குற்றம்சாட்டுகின்றனர்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: