இரட்டைக்கொலையில் குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது பயங்கரம்; 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டு கொலை; நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்ட முயன்றபோது போலீசார் அதிரடி

சென்னை: செங்கல்பட்டில் 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முயன்றபோது அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்ட முயன்ற 2 ரவுடிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (எ) அப்பு (32). பிரபல ரவுடி. இவர் மீது, திமுகவை சேர்ந்த முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் ரவிபிரகாஷ் கொலை மற்றும் பல கொலை முயற்சி, அடிதடி, ஆள்கடத்தல் உள்பட ஏராளமான வழக்குகள் செங்கல்பட்டு டவுன் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் மாலை கார்த்திக், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு பைக்கில் சென்றார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர், கண் இமைக்கும் நேரத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகளை கார்த்திக் மீது வீசினர். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில், வீச்சரிவாளால் கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் மர்ம நபர்கள், செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள பிரபல ரவுடி மகேஷ் (22) வீட்டுக்கு சென்றனர். அங்கு, தனி அறையில் டிவி பார்த்து கொண்டிருந்த மகேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு ஏஎஸ்பி ஆசிஸ் பச்சோரோ, டவுன் இன்ஸ்பெக்டர், வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், வெடிக்காமல் சாலையில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பாக கொண்டு சென்றனர். மாவட்ட எஸ்பி அரவிந்தன், சம்பவ இடங்களை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. காஞ்சிபுரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது அப்பகுதியில் சிறிது தூரம் ஓடி நின்றது. இரு கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பிஸ்கெட் (எ) மொய்தீன், தீனா (எ) தினேஷ், மாது (எ) மாதவன் ஆகியோருக்கும், கொலையான கார்த்திக், மகேஷ் ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. அவர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அதனால் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் எஸ்பி அரவிந்தன், ஏஎஸ்பி ஆசிஸ் பச்சோரோ உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ரவிக்குமார், வடிவேல் முருகன், ருக்மாங்கதன் ஆகியோர் கொண்ட 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  செங்கல்பட்டைச் சேர்ந்தவர் தீனா. இவரது அக்கா பவித்ரா. இவரை 2018ம் ஆண்டு தீனாவின் நண்பரான அரி காதலித்துள்ளார். இது தீனாவுக்கு தெரியவர தகராறு ஏற்பட்டது. இதனால் அரி, தீனா என இரு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டுள்ளனர். இதில் அரியின் கோஷ்டியை சேர்ந்த மகேஷ், ஒரு சம்பவத்தின்போது, தீனாவின் காலில் வெட்டினார். இதனால் தீனா நடக்க முடியாமல் அவதிப்பட்டார். ஒருமுறை பைக் ஓட்டும்போது கீழே விழுந்ததில் கண் பகுதியும் சேதமானது. இதனால் ஆத்திரமடைந்த தீனா, மகேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஆனால், மகேஷ் எப்போதும், பிரபல ரவுடியான அப்பு (எ) கார்த்திக் என்பவருடன்தான் இருப்பார். மகேஷை சீண்டினால் கார்த்திக் தட்டி கேட்பார்.

அதனால் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி மொய்தீன், தினேஷ், மாதவன் ஆகியோர், கார்த்திக், மகேஷ் ஆகியோரை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த 3 பேர் மீதும் ஏற்கனவே நகராட்சி ஊழியர்களை போதையில் வெட்டியது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், கொலையாளிகள் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று அதிகாலை  தகவல் கிடைத்தது. உடனே ஒரு தனிப்படை போலீசார் மற்றும் உத்திரமேரூர் போலீசார் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். திருப்புலிவனம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதிகாலை கொலையாளிகளில் செங்கலப்ட்டை சேர்ந்த மாதவன்(25), திருப்போரூரை சேர்ந்த ஜெசிகா (26) என்பரை போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளான  தீனா(எ)தினேஷ், மொய்தீன் ஆகியோர்  செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றபள்ளி மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அந்த நேரத்தில் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து போலீசார் மீது வீசினர். இதில் ஒரு குண்டு வெடித்தது. மற்றொரு குண்டு வெடிக்காமல் கிடந்தது. நாட்டு வெடிகுண்டு வீச்சில் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் போலீசாரை கொலையாளிகள் வெட்ட பாய்ந்தனர். இதனால் உஷாரான போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில், தீனா(எ)தினேஷ், மொய்தீன் ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் வெடிக்காமல் கிடந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, என்கவுன்டர் செய்யப்பட்ட இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை கார்த்திக், மகேஷ் ஆகியோர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்குப்பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  என்கவுன்டரில் கொல்லப்பட்ட தீனா, மொய்தீன் சடலங்களை உறவினர்கள் பெற முன் வராததால், பிரேத பரிசோதனை செய்யப்படாமல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெசிகா, மாதவன் ஆகிய 2 பேரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.    சம்பவ இடத்தை ஐஜி சந்தோஷ்குமார், டிஐஜி சத்தியப்பிரியா, செங்கல்பட்டு எஸ்பி அரவிந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: