பாலியல் புகார் தொடர்பான வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஜன.28-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன், தன்னுடன் பணிபுரிந்த பெண் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது.

அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தெலுங்கானாவுக்கு வழக்கை மாற்ற கோரிக்கை வைத்து இருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று வழக்கை தெலுங்கானாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியிருந்தது.

மேலும், இந்த வழக்கை தெலங்கானா டி.ஜி.பி மேற்பார்வையிட்டு, ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்துவைத்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி முருகன் தரப்பிலும், தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஜி முருகன் பாலியல் அத்துமீறல் புகார் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தெலங்கானாவுக்கு மாற்றிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதனையடுத்து, தமிழக அரசு மற்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யும் தற்போது தமிழகத்தில் வழக்கு நடந்தால் தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தார். இதனால் தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனுவை, நீதிபதிகள் ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: