தஞ்சாவூர் மார்க்கத்தில் சுற்றி வருவதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் தினமும் தாமதம்

நெல்லை: தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கத்தில் சுற்றி வருவதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் தினமும் தாமதமாக வந்து சேர்கிறது. அரியலூர் அருகே நடக்கும் ரயில்வே பணிகள் காரணமாக கடந்த மாத இறுதியில் குருவாயூர் எக்ஸ்பிரசின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்(எண்.16127)  வழக்கமான வழித்தடம் தவிர்த்து, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செந்தூர் எக்ஸ்பிரசின் வழித்தடத்தில் குருவாயூர் எக்ஸ்பிரசும் பயணித்து வருவதால், கடந்த ஒரு வாரமாக தென்மாவட்டங்களுக்கு தாமதமாக வருகிறது. குறிப்பாக நெல்லைக்கு இரவு 7.30 மணிக்கு வரவேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ், இரவு 9.15 மணிக்கு வந்து சேருகிறது. அதன் பின்னர் புறப்பட்டு நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்கிறது. குருவாயூர் மற்றும் திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் இதனால் ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். வரும் 10ம் தேதிக்கு பின்னர் இந்நிலைமை சீரடைய வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: