ஏற்றுமதி உயர்ந்ததற்கு இந்திய ஆடைகளுக்கான தேவை அதிகரிப்பு காரணம்: ஏஇபிசி தலைவர் பாராட்டு

சென்னை: நாட்டின் ஏற்றுமதி கடந்த மாதம் 37 சதவீதம் அதிகரித்ததற்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல், இந்திய ஆயத்த ஆடைகளுக்கு மேலை நாடுகளில் வரவேற்பு கிடைத்துள்ளதை காட்டுவதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி ₹2.77 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பரில் இது சுமார் ₹2.02 லட்சம் கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏஇபிசி) தலைவர் ஏ.சக்திவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏற்றுமதியின் தற்போதை நிலை தொடர்ந்து நீடித்தால், நடப்பு நிதியாண்டில் ₹30 லட்சம் கோடி என்ற ஏற்றுமதி இலக்கை எட்டி விடலாம். கடந்த மாதத்தில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 22 சதவீதம் உயர்ந்து ₹10,950 கோடியாக உள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ஆடை ஏற்றுமதி ₹83,475 கோடியாக உள்ளது. சவால்களுக்கு மத்தியிலும் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்திய ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருவதும் இதற்கு முக்கிய காரணம்.

மேலும், உற்பத்தியுடன் சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் (பிஎல்ஐ) மற்றும் பிரதமர் மித்ரா திட்டம் ஆகிய 2 திட்டங்கள், சர்வதேச ஜவுளி மற்றும் ஆடைகள் சந்தையில் இந்தியா இடம்பெற உதவுவதாக அமைந்துள்ளது. இந்த துறையில் பெரும்பாலானவர்கள் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்  துறையில் உள்ளவர்களாக இருப்பதால்,  முதலீடு மற்றும்  ஆண்டு வர்த்தக வரம்பை பாதியாக குறைப்பது பிஎல்ஐ திட்டத்தில் மேலும் பலர் பலன் பெற வாய்ப்பாக அமையும். இவ்வாறு ஏ.சக்திவேல் கூறியுள்ளார்.

Related Stories: