பாங்காங் ஏரியின் குறுக்கே பாலம் கட்டுவதுடன் எல்லையில் 60,000 ராணுவ வீரர்களை குவித்துள்ள சீனா : கோடைகால பயிற்சி முடிந்தும் துருப்புகளை குறைக்காததால் பதற்றம்

புதுடெல்லி: இந்திய-சீன எல்லையில் பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா பாலம் கட்டி வருவதுடன், கோடை கால பயிற்சி முடித்திருந்தும் 60,000 ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் மே 5ம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இந்திய-சீன படை  வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதால் இருதரப்பிலும் வீரர்கள்  இறந்தனர். இதையடுத்து இந்தியாவும் சீனாவும் அவரவர் எல்லைப் பகுதியில்  ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளன. மேலும், பாதுகாப்புக்  கட்டமைப்புகளை வலுப்படுத்தும் திட்டங்களையும் இருநாடுகள் தீவிரமாக  மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் சீன எல்லையோரம் அந்நாடு புதிய பாலம் அமைத்து வருவது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு அருகே அமைந்துள்ள சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப் பகுதியை இணைக்கும் வகையில் புதிய பாலத்தை குர்னாக் பகுதியில் சீனா கட்டுமானம் செய்து வருகிறது. அந்தப் பகுதிக்கு தனது படைகளைக் கொண்டு செல்வதற்காக சீனா இந்தப் பாலத்தை அமைத்து வருவதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்தனர். சீனா மேற்கொண்டு வரும் இந்த கட்டுமானத் திட்டங்கள் குறித்து இந்தியாவுக்கு தெரியும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு லடாக்கில் கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கும் மேலாக ராணுவ ரீதியான பதற்றங்கள் நீடிக்கும் நிலையில், ஏறக்குறைய 60,000 ராணுவ வீரர்களை சீன ராணுவம் இந்திய எல்லையை நோக்கி நிறுத்தி உள்ளது.

இதன்மூலம் ராணுவம் உண்மை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக விரைவாகச் செல்லவும், அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் முடியும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘கோடை காலத்தில் சீனா தனது துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வழக்கம். கோடை காலத்தில் அவர்கள் பயிற்சிக்காக அதிக எண்ணிக்கையில் குவிக்கப்படுவர். தற்போது அவர்கள் தங்கள் முந்தைய இடங்களுக்கு திரும்பிவிட்டனர். இருப்பினும் 60,000 சீன துருப்புக்களை லடாக்கிற்கு எதிரே உள்ள பகுதிகளில் நிலை நிறுத்தி வைத்துள்ளது. எல்லையில் சீனா உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதால், இந்தியாவுக்கு சீனா தரப்பில் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவுலத் பெக் ஓல்டி பகுதியின் முன்புறம் மற்றும் பாங்காங் ஏரி பகுதிக்கு அருகில் புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன.

எல்லையில் எவ்வித ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க, கிழக்கு முகப்பில் உள்ள லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபிள்ஸின் தீவிரவாத எதிர்ப்புப் படை தயாராக உள்ளது. இந்தியா தரப்பில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டுமே சீனத் துருப்புக்களைக் கண்காணிக்க முடியும். தற்ேபாது இரு தரப்பினரும் பரஸ்பர படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க அதிக எண்ணிக்கையிலான கண்காணிப்பு ட்ரோன்களை நிலைநிறுத்தி வைத்துள்ளனர். கிழக்கு லடாக்கில் பதற்றத்தை குறைக்க இருதரப்பிலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் கூட பதற்றம் நீடிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: