நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.! முதல்வர் ஸ்டாலினுக்கு தொழிற்சங்கத்தினர் நன்றி.!

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தொழிற்சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 30.12.2021 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஆற்றிய உரையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியக்கூடிய பல்வேறு பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வழங்கப்படக் கூடிய ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அங்கே பணிபுரியக்கூடிய  பட்டியல் எழுத்தருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஊதியத்தை ரூ.5285 ஆகவும், உதவியாளர்களுக்கு, காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தை ரூ.5218 ஆகவும் உயர்த்தி, அகவிலைப்படித் தொகை ரூ.3499 சேர்த்து வழங்கிட ஒப்புதல் அளித்தார்கள்.

 மேலும், இங்கு பணிபுரியக்கூடிய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூலித் தொகையை மூட்டை ஒன்றுக்கு ரூ.3.25லிருந்து 10 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்தார்கள். அதுமட்டுமின்றி பருவகால பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர்களுக்கு போக்குவரத்துப்படியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியத் தொகையை உயர்த்தி அறிவித்தமைக்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மு. சண்முகம், பொருளாளர் திரு. கி. நடராசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் திரு. மா. பேச்சிமுத்து, பொதுச் செயலாளர் திரு.கோ.சி. வள்ளுவன் மற்றும் ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் திரு.டி.எம். மூர்த்தி,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் திரு.சி. சந்திரகுமார், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் திரு. அ. சாமிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் உள்ளனர்.

Related Stories: