9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அவதூறு செய்தி சாட்டை துரைமுருகன் குண்டாசில் கைது

சென்னை: பெண் தொழிலாளர்கள் இறந்ததாக அவதூறு பரப்பியதாக சாட்டை முருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11ம் தேதி விடுதியில் உணவு சாப்பிட்ட 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே பூந்தமல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் 9 பேரின் நிலை குறித்த கேள்வி எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற பெண் ஊழியர்கள், பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர், எம்எல்ஏ, கலெக்டர் மற்றும் அலுவலர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் யூடியூபர் சாட்டை துரை முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்ததாக செய்தி பதிவிட்டு, சமூக வலைதளங்களில் வைரலானது.திருவள்ளூர் மாவட்ட  எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், எஸ்ஐ சக்திவேல் ஆகியோர் திருச்சியில் பதுங்கியிருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்து திருவள்ளூருக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், துரைமுருகன் மீது அவதூறு செய்தி பரப்புதல், உண்மைக்கு புறம்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கலெக்டருக்கு மாவட்ட எஸ்பி வருண்குமார் பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: