குழந்தைகள் நல குழு தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் சிறார் நீதி சட்டத்தை திருத்த 2 வாரம் அவகாசம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு நியமனம் தொடர்பான தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்த, தமிழக அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் சிறார் நீதி சட்ட விதிகளைப்போல, தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்தக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஷஹிருதின் முகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசின் சிறார் நீதி சட்டப்படி, குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இருவர் உள்பட ஏழு பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்ற  நிலையில், தமிழக அரசு விதிகள், மாவட்ட நீதிபதி, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய குழுவை அமைக்க கூறுவது சட்டவிரோதமானது. குழந்தைகள் காப்பகங்களை நடத்துவோர் குழுக்களில் இடம் பெறக்கூடாது என்று ஒன்றிய அரசு விதிகள் வலியுறுத்துகிறது.

ஆனால், தொண்டு நிறுவன பிரதிநிதிகளை நியமிக்க தமிழக விதிகள் அனுமதியளிப்பதால் குழந்தைகள் நலன் பாதிக்கப்படும். எனவே, இந்த விதிகளை ஒன்றிய அரசு விதிகளுக்கு உடன்பட்டதாக திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு நியமனம் தொடர்பான தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளை திருத்துவது குறித்து விளக்கமளிக்க அரசுத்தரப்பில் ஒரு வார அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரு வாரங்கள் அவகாசம் வழங்கினர். விதிகளை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: