ஆவடி பகுதியில் கனமழையால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை

ஆவடி: ஆவடியை அடுத்த கர்லப்பாக்கம், பாண்டேஸ்வரம், கீழ்கொண்டையார், மேல்கொண்டார், அரக்கம்பக்கம், பாலவேடு, கதவூர், மேட்டு தும்பூர், பாக்கம் மற்றும் மாகரல் ஆகிய கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக, நெல், கீரை, காய்கறி, வேர்க்கடலை, மல்லிகைப் பூ உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களில் தற்போது சுமார் 200 ஏக்கர் விளைநிலங்களில் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த நெற்பயிர் நன்றாக விளைந்து கதிர்களை இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழை பெய்தது. இந்த பகுதிகளில் 23 செ.மீட்டர் வரை மழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக விளைநிலங்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி நெற்கதிர்கள் முழுவதும் மூழ்கி சேதமானது. தண்ணீரில் நெற்பயிர்களும் அடித்தும் செல்லப்பட்டன. தண்ணீர் தேங்கி நின்றதால்  விளைநிலங்களில் நெற்கதிர்கள் முளைக்கட்டு நிலைக்கு வந்துவிட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘’ஆவடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த 2 மாதத்துக்கு முன்பு பலவகையான நெல் பயிர்களை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சி வளர்த்து வந்தோம். நெற்பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. தற்போது பெய்த மழையால் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ரூ.75 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது.

கடன்களை வாங்கி விவசாயத்தை செய்துவரும் எங்களுக்கு இந்த இழப்பு மிகவும் வேதனையை அளிக்கிறது. மேற்கண்ட கிராமங்களில் சேதம் அடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் குழு வந்து பார்வையிட வேண்டும். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி செய்தால்தான் மீண்டும் விவசாயம் மேற்கொள்ள முடியும். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: